கடந்த 12ஆம் தேதி வடபாதி ஏரிக்கரையில் சிறுபாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வடபாதி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ராயபிள்ளை (56) 120 லிட்டர் கள்ளச் சாராயத்தை கடத்தி வந்துள்ளார். அவரை காவலர்கள் மடக்கிப்பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வேப்பூர் காவல் ஆய்வாளர் கவிதா விசாரணை மேற்கொண்டதில், ராயபிள்ளை மீது சிறுப்பாக்கம் மற்றும் விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. எனவே இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆணைப்படி ராயபிள்ளை ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டார்.