தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடலூர் அரசு மருத்துவமனையில் வளாகத்திற்குள் மருத்துவர்கள் வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக மருத்துவமனைக்கு வெளியே ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த 2 பேர், தங்களது வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என காவலாளியிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் காவலாளி மருத்துவமனை வளாகத்திற்குள் வேறு எந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த இருவரும் மருத்துவமனை காவலாளியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவலாளியைத் தாக்கிய இருவர் மீதும் கடலூர் புறநகர் காவல் நிலையத்தில் மருத்துவமனையின் தலைமை இயக்குநர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறுவன் கைது