கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூரில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இறைச்சிகளை வாங்குவதற்கும் அதிக அளவில் வெளியே வருவதால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஏப்ரல் 14ஆம் தேதிவரை இறைச்சி கடை நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை மீறி கடலூர் முதுநகர் ஆற்றங்கரை வீதியில், மீன் மற்றும் இறைச்சி கடை இயங்கிவருவதாக வருவாய் துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. வட்டாட்சியர் செல்வக்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரகுநந்தன் நகராட்சி ஊழியர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது, அப்பகுதியிலுள்ள கடையொன்றில் இறைச்சி விற்பனை செய்து வந்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து அந்தக் கடைக்கு அலுவலர்கள் சீல் வைத்து அங்கிருந்த மீன் உட்பட அனைத்தையும் பறிமுதல் செய்து நகராட்சியில் ஒப்படைத்தனர்.
இதனிடையே அந்தக் கடையை நடத்தி வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும்நிலையில், இதேபோல் மீன் மற்றும் இறைச்சி கடை நடத்திய சுமார் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: எந்த மாஸ்க்கை உபயோகிக்க வேண்டும் -விளக்குகிறார் நுரையீரல் மருத்துவர்!