கடலூர் மாவட்டம் முதுநகர் சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பெஞ்சமின் - பிரதீபா தம்பதியினுடைய மகன் ஜெய்வின் ஜோசப் (18). இவர் கடலூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி காணாமல் போயுள்ளார்.
இவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால், இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாயமான ஜெய்வின் ஜோசப்பை தேடி வந்தனர்.
இதற்கிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில், ஜெய்வின் ஜோசப்பை கண்டுபிடிக்க முதுநகர் காவல் ஆய்வாளர் பால் சுதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவல் துறையினர், மாணவன் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் காவல் துறையினருக்கு ஏழு பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் முதுநகர் பகுதியைச் சேர்ந்த விஜய் (21), காரைக்காடு பகுதியைச் சேர்ந்த பிரபு என்கின்ற பிரபாகரன் (27) என்பவரை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கடலூர் மார்க்கெட் காலனியைச் சேர்ந்தவர்கள் ஒரு தரப்பினராகவும், முதுநகர் மோகன்சிங் தெரு, காரைக்காடு, நெய்வேலி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஒரு தரப்பினராகவும் இருந்துள்ளனர். இந்நிலையில், மோகன் சிங் தெருவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசுவது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை மாணவர் ஜெய்வின் ஜோசப், தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த முதுநகர் மோகன் சிங் தெருவைச் சேர்ந்த விஜய், காரைக்காடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் திட்டமிட்டபடி மாணவன் ஜெய்வின் ஜோசப்பை காரைக்காடு உப்பனாற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, மது குடிக்க விட்டு, பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கு புதைத்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவன் புதைக்கப்பட்ட இடத்திற்கு விஜய் மற்றும் பிரபாகரனை அழைத்து வந்து இடத்தை அடையாளம் காட்டும்படி கூறினர். பின்னர் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, காவல் ஆய்வாளர் பால் சுதர் உள்ளிட்ட காவல்துறையினர், வட்டாட்சியர் செல்வகுமார், தடவியல் நிபுணர், மருத்துவ குழுவினர் ஆகியோர் மாணவன் புதைக்கப்பட்ட உப்பனாற்றுக்குச் சென்றனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட விஜய் மற்றும் பிரபாகரனை அழைத்து வந்து புதைக்கப்பட்ட இடத்தை காட்டும்படி காவல்துறையினர் கூறினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மாணவனை கொன்று புதைத்த இடத்தை காட்டினார்கள். தொடர்ந்து, தடவியல் நிபுணர் சாரா தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவனின் உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் உடற்கூறாய்வு செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வந்தார். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த அனு என்கிற மணியரசன் (24), தேவா (24), சின்ன காரைக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24), இளங்கோவன் (38), ஈச்சங்கோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (21) ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.