கடலூர் அருகே உள்ள பெரிய கங்கனா குப்பம் பகுதியில் அவ்வப்போது வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்து போவதாக கிடைத்த தகவலை அடுத்து, மத்திய புலனாய்வு காவல்துறையினர் இன்று (ஜூலை. 2) அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் கடலூர் மாவட்ட காவல்துறையினரும் சென்றனர்.
வீட்டை சோதனை செய்து அங்கிருந்த நஜ்மூர் ஷித்தர், ஷக்தர் முல்லா, பாபு ஷேக் என்ற மூன்று இளைஞர்களையும் பாத்திமா பவி, ப்ரீத்தா பீவி என்ற பெண்களையும் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மத்திய புலனாய்வு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் இருந்த நபர்கள் கல்கத்தா பகுதியில் இருந்து பெண்களை வரவைத்து புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.