கடலூர்: மாவட்டத்தில் மொத்தம் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையும் மற்ற கிராமங்கள் இழு வலையையும் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன.
அரசின் உத்தரவுப்படி அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின் விசைப்படகுகள் ஐந்து நாட்டிக்கல் தொலைவுக்கு மேல்தான் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட வேண்டும். இதில், இழு வலையும் சுருக்கு மடி வலையும் அதிக திறன் கொண்டவை என்பதனால் தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலைக்கு மட்டும் தடை விதித்து இழு வலைக்கு அனுமதியளித்துள்ளது.
இழு வலை பயன்படுத்தும்போது சிறு படகுகள், வலைகள் அதிகம் பழுது ஏற்படுகிறது. இதனால் சுருக்குமடி வலைக்கு இணையான இழு வலையையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று (ஜூலை.09) கடலூர் துறைமுகத்தில் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி மீன்வளத்துறை அலுவலர்களையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால் பதற்றமான நிலை நிலவியதால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மீன்வளத்துறை அலுவலர்களிடம் மனு அளித்தனர். இந்த மனு மீது வருகின்ற திங்கள்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தடையை மீறி சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்போம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நீலகிரி, கோவை, டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு