கடலூர் முதுநகர் சங்கர நாயுடு தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகள் சபீனா(21). பொறியாளரான இவருக்கும், சிதம்பரம் அருகேயுள்ள பெரிய குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, பாவாடைசாமி என்பவரின் மகன் பாவேந்தன் என்பவருக்கும், 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது 36 பவுன் நகைகளையும், கட்டில், அலமாரி, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களையும் வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். மேலும், திருமணத்துக்குப் பிறகு தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகத் தெரிகிறது.
திருமணம் முடிந்த ஒருவாரத்துக்குப் பின்னர், பெண் வீட்டார் தர வேண்டிய சீர்வரிசைப் பொருட்களைக் கேட்டு, சபீனாவை அவரது கணவர் துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சீர்வரிசைப் பொருட்களை வாங்கித்தராததால், அதற்குப் பதிலாக இரண்டு லட்சம் ரூபாயை வாங்கி வரும்படிக் கேட்டு பாவேந்தனும், அவரது பெற்றோரும் சபீனாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த சபீனா, கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, கடலூர் முதுநகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்றார். அங்கு கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லி கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கையில் சபீனாவின் பெற்றோர் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சபீனாவுடன் குடும்பம் நடத்த விரும்பாத பாவேந்தன், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சபீனா விஷமருந்தியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சபீனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பாவேந்தன், அவரது தந்தை பாவாடை சாமி, தாயார் அஞ்சா ஆகியோர் மீது கடலூர் முதுநகர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.