கடலூர்: சிறப்பு செயலாக்கத்திட்டத்தின்கீழ் 2006 முதல் 2011 வரை இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டன.
இதில் எல்காட் நிறுவனத்திடம் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு 6 லட்சம் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் பெறப்பட்டு, அதில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 381 தொலைக்காட்சிப் பெட்டிகள் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.
விநியோகம் நிறுத்தம்
மேலும் 7,619 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதற்கிடையே மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மாதிரி விதிகள் அமலுக்கு வந்ததால், விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து நல்ல நிலையில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பள்ளிகள், மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், அங்கன்வாடி, அநாதை இல்லங்கள் போன்ற இடங்களுக்கு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
பழுதடைந்த தொலைக்காட்சிப் பெட்டிகள்
தற்போது இதில் கடலூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 619 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதடைந்துள்ள நிலையில் மேற்கண்ட நிறுவனங்களுக்கு வழங்க இயலாத நிலை உள்ளதால், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதில் கடலூரில் 7,238, குறிஞ்சிப்பாடியில் 10, பண்ருட்டியில் 7, சிதம்பரத்தில் 188, விருதாச்சலத்தில் 58, திட்டக்குடியில் 118, என மொத்தம் 7,619 தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன.
இந்த தொலைக்காட்சிப் பெட்டிகளை மக்களால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதால், இவை மக்களுக்கு வழங்கப்படாது எனவும், சமுதாயக் கூடங்களில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சில தினங்களுக்கு முன்பு அம்மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.
இட மாற்றம்
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) கடலூர் குண்டு சாலையில் உள்ள சமுதாயக் கூடத்திலிருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளை, அங்கிருந்து லாரி மூலம் அப்புறப்படுத்தி வேறு இடங்களுக்குக் கொண்டு செல்ல மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் அவை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் வைக்கப்பட்டது.
இதையடுத்து குண்டு சாலையில் உள்ள இந்த சமுதாயக்கூடம் மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு, பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் செய்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்து தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பக்கா பட்ஜெட் ப்ளான் - அமைச்சர், அலுவலர்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ்!