கடலூரில் நேற்று (மே 26) இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது வீசிய அந்த சூறைக்காற்றினால் மாவட்டத்தில் பிரதானமாக பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
குறிப்பாக ராமாபுரம், சாத்தாங்குப்பம், ஓதியடிகுப்பம், காட்டுபாளையம், வெள்ளக்கரை, எஸ்.புதூர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் பலர் சுமார் 5 லட்சத்திற்கும் மேல் வாழை சாகுபடி செய்திருந்தனர். இதனிடையே நேற்றுஅடித்த சூறாவளியினால் சுமார் 2 லட்சம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒரு வாழை மரத்திற்கு ரூபாய் 150 செலவு செய்த நிலையில் தற்போது பூ விட்டு குலைதள்ளிய நிலையில், எதிர்பாராமல் திடீரென சூறாவளியுடன் பெய்த மழையினால் வாழை மரம் சாய்ந்ததில் சாகுபடி செய்த வாழைமரங்கள் அனைத்தும் பாழாகின. இதனால்,விவசாயத்தையும் அதன் மூலமாக வரும் வருமானத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயப் பெருங்குடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலைத் தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசு வாழை சாகுபடி செய்தவர்கள் குறித்து உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி, சூறாவாளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பலத்த சூறைக்காற்று: அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் செவ்வாழைகள் நாசம்