நாடு முழுவதும் கச்சா எண்ணெயின் மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால், பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதற்கு மாற்றாக பயோ டீசல் எரிபொருளை பயன்படுத்துவதற்கு நீண்ட காலமாக ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
அதன் அடிப்படையில் பயோ டீசலை விற்பனை செய்வதற்கான நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அவை முழுவதுமாக நடைமுறைக்கு வராத நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் போலியான பயோ டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக காணொலி அடங்கிய ஆதாரத்தை தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பி. முரளி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பயோ டீசல் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் டேங்கர் லாரிகளில் வைத்து பாதுகாப்பில்லாமல், நேரடியாகவே சிலர் பயோ டீசலை விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் பெட்ரோலிய முகவர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மண்ணெண்ணெய் கலந்த டீசல் விற்பனை - பெட்ரோல் பங்க் முற்றுகை!