கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், அதேபகுதியில் வசிக்கும் பன்னீர் மகன் பிரேம்குமார் (20) என்பவர் முகநூலில் ஆபாச வார்த்தைகளை பதிவு செய்து கார்த்திகாவிற்கு அனுப்பி வைத்ததாகவும், இதற்கு கார்த்திகா திட்டி பதிவு செய்து அனுப்பியதாகவும், அந்தப் பதிவை படித்த பிரேம்குமாரின் உறவினர்கள், கார்த்திகா வீட்டிற்கு வந்து பிரச்னை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, முகநூல் பதிவால் மனவேதனை அடைந்த கார்த்திகா நேற்று மதியம் சுமார் 3.30 மணி அளவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கார்த்திகா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அத்தை மகனும், அவரது காதலனுமான வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (23) கார்த்திகாவைப் பார்க்க வந்தபோது, வீனங்கேணி அடுத்துள்ள செங்கால்பாளையத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கார்த்திகாவின் உடலை மீட்டு கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கும், விக்னேஷ் உடலை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கும் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
முகநூல் பதிவால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகநூலில் ஆபாச பதிவிட்ட பன்னீர் மகன் பிரேம்குமாரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் கார்த்திகாவின் உறவினர்கள், குற்றவாளியை கைது செய்யக்கோரி விருத்தாசலம் கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மர்மகும்பல் கல்வீச்சில் ஈடுபட்டதால் செய்தியாளர்கள் காயமடைந்தனர். இதில் கிருஷ்ணன் என்ற தனியார் தொலைகாட்சி செய்தியாளரின் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேலும், அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.