கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர் அருண்மொழி தேவனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், "நமது கூட்டணி பலம் வாய்ந்த வெற்றிக் கூட்டணி. அதிமுக அரசு காவிரி உரிமைகளை உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி பெற்றுத் தந்தது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து அதனை பாதுகாத்து கொடுத்துள்ளோம்.
ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு போன்ற கொடிய திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு. ஆனால், அதனை அதிமுக அரசு தடுத்து நிறுத்தியது. விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
வெள்ள காலங்களில் நெல்லுக்கு ஆயிரத்து 500 கோடி நிவாரணத்தை அளித்தது அம்மாவின் அரசு. தனியார் மருத்துவமனையைவிட அரசு மருத்துவமனைகள் நன்றாக உள்ளன. தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளோம்.
இதில், 435 மாணவர்கள் தற்போது மருத்துவம் பயின்று வருகின்றனர். நான் ஊர்ந்து சென்று முதலமைச்சர் பதவி வாங்கியதாக மு.க.ஸ்டாலின் சொல்கிறார். நான் என்ன ஊர்ந்து செல்வதற்கு பாம்பா, பல்லியா. நான் மனிதன் எனவே நடந்து சென்றுதான் முதலமைச்சர் பதவி ஏற்றேன்.
’100 நாள் வேலையை 150 நாள் வேலை’ என அறிவித்தது அம்மாவின் அரசு. வருகிற ஆட்சி நமது ஆட்சியாக அமையுமானால் ஆறு சிலிண்டர்கள், கேபிள் டிவி ஆகியவை இலவசம், முதியோர் உதவித்தொகை உயர்வு என ஏராளமான திட்டங்களை வழங்கவும் தயாராக உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: ‘NEET க்கு பதில் SEET’ - மநீம தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!