நிவர் புயல் வரும் 25ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழையும் இருக்கும் என்றும் வானிலை அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி இன்று(நவ.24) கடலூர் அருகேயுள்ள தைக்கால் தோணித்துறை சொத்திக்குப்பம், ராசா பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் உள்ளிட்ட புயல் பாதுகாப்பு மையங்களை ஆய்வு செய்தார்.
பின்பு மீனவர்கள் படகுகளை கரையில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனரா? என்று ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் படகுகளில் உள்ள மீன் வலைகளை பத்திரமாக மேடான பகுதிகளில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
"புயல் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மற்றும் இடிந்து விழும் நிலையில் உள்ள கூரை வீடுகளில் உள்ள மக்கள் அனைவரும் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர கடலோர பகுதிகளில் உள்ள சிறிய, பெரிய படகுகள் அனைத்தையும் கரையோரங்களில் பத்திரமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புயல் பாதுகாப்பு மையங்களில் மற்றும் இதர தங்கும் மையங்களில் 164 ஜெனரேட்டர்கள் தயார் நிலையிலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம். இதுதவிர தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை தந்துள்ளனர். இவர்கள் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று குழுக்கள் கடலூர் பகுதியிலும் மற்ற மூன்று குழுக்கள் பரங்கிப்பேட்டை சிதம்பரம் பகுதிகளிலும் உள்ளனர். இதில் மொத்தம் 126 பேர்கள் இருக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 278 இடங்கள் புயல் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடங்களாகவும், 92 இடங்கள் மிகவும் பாதிக்கக்கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த புயல் மழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இந்த புயல் மழை எச்சரிக்கையால் உயிருக்கும், விவசாய பயிர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அலுவலர்கள் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் நாளைக்குள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்துக்கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்" என்றார்.