கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் பழனிசாமி நேரடியாகப் பார்வையிட்டபின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, 'நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் வழங்கியிருந்தோம். இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அறிவுறுத்தலின்பேரில், கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர், அமைச்சர் எம்.சி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி, நிலைமை குறித்து ஆராய்ந்து, தக்க அறிவுரைகள் நல்கி,நடவடிக்கை எடுத்து வந்தோம்.
தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, 'நிவர்' புயலில் இருந்து பெரும்சேதம் இல்லாமல் தப்பியிருக்கிறோம். நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் 321 மரங்கள் விழுந்தன. அவை அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன.
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 833 முகாம்கள் நிவர் புயலால் பாதிக்கப்பட்டிருந்தவர்களைத் தங்கவைக்க ஏற்பாடு செய்து வைத்தோம். இதில் சுமார் 13 லட்சம் பேர் வரை தங்கவைக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இருப்பினும், தமிழ்நாடு முழுக்க 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே தங்கியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் மாவட்டத்தில் 441 முகாம்களில் சுமார் 52,223 பேரை தங்கவைத்தோம். கடலூர் மாவட்டத்தில் 77 மின் கம்பங்கள் புயலால் பாதிக்கப்பட்டது. உடனடியாக அதை சரிசெய்ய பணிகள் முடுக்கிவிடபட்டுள்ளன.
உயிர்ச்சேதம் இருக்கக்கூடாது என்பதற்காகவே, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பகுதி வாரியாக மின்கம்பங்களை சரிசெய்தபின்னரே, மின்சாரம் வழங்கப்படும். சரியான நடவடிக்கையால் தான், உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் 1617 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியும், 35 ஹெக்டர் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தும் உள்ளன. பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் தொடங்கியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட வேளாண் மக்களுக்கு, வேளாண் பேரிடர் நிதியிலிருந்து நிவாரணத்தொகை வழங்கப்படும். காப்பீடு செய்திருந்தால், காப்பீட்டுப்பணம் அரசின் நடவடிக்கையால் உடனடியாக பெற்றுத் தரப்படும்.
நிவர் புயலில் இரவு, பகல் பாராமல் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள், பல்வேறு துறை சார் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றிய காரணத்தினால், மக்கள் பெருமளவில் காக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக அரசை பொறுத்தவரை, நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் மாவட்ட நிர்வாகம் மூலம் அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’இரவுக்குள் 80% மின் இணைப்புகள்’ - அமைச்சர் தங்கமணி தகவல்