கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துவருகின்றனர்.
மற்ற கிராமங்களில் இழு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி அவ்வூர் மீனவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.
மேலும் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்வதாக தேவனாம்பட்டினம் மீனவர்கள் அறிவித்திருந்தனர்.
தொடர்ந்து தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் தாங்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கப்போவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக வந்தனர்.
அப்போது பாரதி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேரமாகச் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனால் காவல் துறையினர் போக்குவரத்தை மாற்று வழியில் அனுப்பிவைத்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவருக்கு எமனான குரங்கு: சீனாவில் உருவெடுக்கும் புதிய வைரஸ்