கடந்த சில நாட்களாகவே பெய்து வந்த பருவமழையால் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(19), நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த நவீன் (17), காந்திராஜ் (17), சி.வாக்கராமாரி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணி (53), பண்ருட்டி மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன்(17), பண்ருட்டி அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத்(14), நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த மோகன்தாஸ் (31) ஆகிய 7 பேருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் கடலூர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் கீதா, "மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மக்களிடையேயும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்றார்.