கடலூர்: திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கொட்டாரம் கிராமம் வடக்குத் தெருவைச்சேர்ந்தவர், தனவேல். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னையைச்சேர்ந்த அனிதா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் ஒரு மாதத்தில் குடும்ப கஷ்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு துபாய் செல்ல தனவேல் திட்டமிட்டார்.
துபாய் தேரா பகுதியில் பிக் ட்ரீம் ஸ்டார் டெக்னிக்கல் சர்வீஸ் எல்.எல்.சி. என்ற நிறுவனத்தில் போர்வெல் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு அங்கு குப்பைகளை எடுக்கும் வேலை முதல் அனைத்து வேலைகளும் வழங்கி துன்புறுத்தி வருவதாகத் தெரிகிறது.
கடந்த ஒரு மாத காலமாக தனவேலுக்கு உடல்நிலை சரியில்லாமலும், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த நிறுவனத்தின் மேலாளரும் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவருமான எட்வின் என்பவரிடம் கேட்டபோது ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.
மேலும், 'பணம் கொடுத்தால் அனுப்பி வைக்கிறேன், இல்லையென்றால் நீ எங்கு வேண்டுமானாலும் சென்று பார்த்துக்கொள்' என்று மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தன்னை மீட்டு தனது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: உலகம் சுற்றும் வாலிபர்களே உஷார்.. கிரெடிட் கார்டுகள் ஜாக்கிரதை!