கடலூர்: தமிழ்நாடு அரசின் கரோனா தளர்வு அறிவிப்பை முன்னிட்டு, கடலூரிலிருந்து புதுவைக்கு இன்று (ஜுலை 12) காலை முதல் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இந்நிலையில் தனியார் பேருந்துகளில் ரூ.18 ஆக இருந்த பயணச்சீட்டின் விலை, மேலும் ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் கடலூர் முதல் புதுவை செல்லும் பயணிகள் ரூ. 20 பயணக் கட்டணமாகச் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பயணச்சீட்டு கட்டண உயர்வு
இது குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பேசுகையில், ”கடந்த சில தினங்களாக தொடர்ந்து டீசல் விலை உயர்ந்துவருகிறது. இதனால் பேருந்து உரிமையாளர்கள் கடலூர் - புதுவை மார்க்கத்தில் பயணச்சீட்டின் விலையை ரூ.2 உயர்த்தியுள்ளனர்.
ஆனால், பல மாதங்களுக்கு முன்னரே கடலூர் - புதுவை செல்லும் அரசுப் பேருந்தில் சாதாரண கட்டணமாக ரூ.20, குளிர்சாதன வசதி உள்ள பேருந்துகளில் ரூ.30 வரையும் வசூலிக்கப்பட்டுவருகிறது” என்றனர்.
பெட்ரோல், டீசல் விலை குறைக்க கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் தினமும் நசுக்கப்பட்டுவருவதால், மத்திய, மாநில அரசுகள் விலை குறைப்பு குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சாலை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்' - ஸ்டாலின்