தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்கள் வழியாக 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றினால் விவசாய நிலங்கள், கடலோர பகுதியில் உள்ள மீனவ வளங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் எனவும் இதனை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையம் அருகே திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், "கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்துவருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒரு நாளும் நாங்கள் விடமாட்டோம்" என்று அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாழவிடு... வாழவிடு... விவசாயத்தை வாழவிடு’ - ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகத் தீர்மானம்