கடலூர் மாவட்டம், முதுநகர் சான்றோர் பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (29). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயசெட்டி தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கலைச்செல்வம் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி விடுமுறை எடுத்து இருந்ததால் கடையின் உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் நெக்லஸ் பிரிவில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கிலோ தங்க நகை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் முரளி, கலைச்செல்வத்தைத் தொடர்பு கொண்ட போது, அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதன் பின்னர் இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் முரளி புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் குணசேகரன், பாலசுதர், துணை ஆய்வாளர் கதிரவன், குற்றப்பிரிவு காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் கலைச்செல்வத்தை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த அதிரடி வேட்டையில் கலைச்செல்வம் வெளியூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வெளியூரில் பதுங்கியிருந்த கலைச்செல்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 97 சவரன் நகைகள், டிவி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
கோரணபட்டு ஊராட்சி 1ஆவது வார்டு: மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியீடு
விசாரணையில், கடையில் உள்ள நகைகளை ஒவ்வொன்றாக திருடி நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அதன் மூலம் பெற்ற பணத்தில் நண்பர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. அத்தோடு வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டு உள்ளார்களா? இல்லை வேறு எங்கேனும் திருடியுள்ளாரா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.