கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி அடுத்த வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் மகன் பன்னீர்செல்வம் (55). விவசாயியான இவர், தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். வயலில் களை செடிகள் அதிகளவில் முளைத்திருந்தன. இதனால் நெல் பயிர் வளர்ச்சியின்றி இருந்தது. இந்நிலையில் விவசாயி தனது விவசாய நிலத்தில் களைக்கொல்லி மருந்து அடிப்பதற்காக இன்று வயலுக்குச் சென்றார்.
வயலில் மருந்து அடித்துக் கொண்டிருந்தபோது மேலே தாழ்வாகச் சென்ற உயர் மின் அழுத்த கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தாக்கி உயிரிழந்த பன்னீர்செல்வத்திற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பன்னீர்செல்வம் வயலில் கடந்த ஆறு மாத காலமாக மின்கம்பி தாழ்வாக சென்றது தொடர்பாக மின்வாரிய அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அலுவலர்களின் அலட்சியத்தினால்தான் விவசாயி பன்னீர்செல்வம் உயிரிழந்துள்ளார். இதேபோன்று மேலும் தொடராமல் மின் கம்பியை முறையாக சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.