கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 229ஆக உயர்ந்துள்ள நிலையில், கடலூர் ஆட்சியர் அன்புச் செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, சென்னை கோயம்பேட்டிலிருந்து கடலூருக்கு திரும்பிய 815 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 197 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 440 பேருக்கு தொற்று இல்லை. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 425 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிராமப் பாதுகாப்பு குழுவின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடலூரில் அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், 900 படுக்கைகள் கையிருப்பு உள்ளது. ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கடலூரில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 21 கட்டுப்பாட்டு மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியில்லை, மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்