கடலூர்: பழமை வாய்ந்த கடலூர் மத்திய சிறை கேப்பர் மலையில் அமைந்துள்ளது. இந்த சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தம் 900 கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் கைதிகளின் தண்டனை காலங்களை பயனுள்ளதாக மாற்றவும் அவர்களின் திறனை வெளிகொணர உதவும் எண்ணத்திலும், அவர்களுக்கு சிறையினுள்ளே பல்வேறு சிறப்பு கைத்தொழில்கள் மற்றும் கலைகள் கற்றுத் தரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடலூர் மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகளுக்கு கைத்தொழில் சொல்லித் தருவது தொடர் வழக்கமாக இருந்து வருகிறது. கட்டிடப் பணிகள் என ஆரம்பித்து பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்வது உள்ளிட்ட பல பயிற்சிகள் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் மூலம் கைதிகள் சிறையில் இருந்து தண்டனை முடிந்து செல்லும் போது, மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் சிறையில் இருக்கும் போது கற்றுத்தேர்ந்த தொழில்கள் மூலம் அவர்கள் வெளியில் சம்பாதிக்கக்கூடிய நிலை உருவாகக்கூடும் என்பதால் இது போன்ற ஒரு முயற்சியில் சிறைத்துறை கலமிறங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் ஆஜராகி வீடு திரும்பிய நபர்களை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
இதனைத் தொடர்ந்து, தற்போது புதிய முயற்சியாக கடலூர் மத்திய சிறையில் இசை கற்றுக் கொள்ளும் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறை கைதிகளுக்கு பாடல் கற்றுக் கொடுக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தற்போது 15 கைதிகள் ஆர்வமுடன் வந்து, தினமும் இசை கற்றுக் கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கற்றுத் தேர்ந்த கைதிகளின் பாடல் சிறை வளாகத்தில் ஒலிப் பெருக்கி மூலம் அனைத்து கைதிகளும் கேட்கும் வகையில் ஒலிபரப்பப்படுகிறது. இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய சிறைத்துறை அதிகாரிகள், "இசைப் பயிற்சியில் சிறப்பாக கற்றுத்தேர்ந்து முடிப்பவர்கள், சிறையில் இருந்து வெளியில் சென்ற பிறகு, தான் கற்றுத்தேர்ந்த கலையைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கு இந்தத்திட்டம் பெரிதளவில் உதவும்" என்றும் தெரிவித்துள்ளனர்.
சிறைக் கைதிகளை உற்சாகமூட்டும் வகையில், இது போன்ற புது விதமான முயற்சியில் கடலூர் சிறைத் துறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முயற்சி கைதிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் சிறைக்கைதிகளின் திறனை அறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற பலத் திட்டங்களை தமிழக அரசு வழிவகுத்துள்ளதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சீமான் மீதான குற்றச்சாட்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை.. தற்போது எதுவும் கூற முடியாது - சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!