கடலுார் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் காசி.தங்கவேலு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:
தேர்தல் பரப்புரைக்கு செல்லும் வழியில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் நிறைவேற்றித் தருவோம். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயம், குடிநீர், சாலை போக்குவரத்து எதுவாக இருந்தாலும் அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.
கடலூரை பொருத்தவரை மீனவர்கள் பிரச்சினை அதிகமாக உள்ளது. கடலூர் எந்தவித முன்னேற்றமும் அடையவில்லை. பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் நன்கு முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் ஆங்கிலேயர் காலத்திலிருந்து வாணிபதளமாக விளங்குகின்ற கடலூர் இன்னும் முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. கடலூர் முன்னேற்றம் அடைவதற்கான எல்லாவித ஏற்படும் செய்வோம்.
கடலூர் துறைமுகத்தை நவீனப்படுத்துவோம். நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவோம். பண்ருட்டியில் முந்திரி விவசாயம் அதிகம் உள்ளது. அதற்கான ஏற்றுமதி மண்டலத்தை அமைப்போம், ஆற்று மணல் கொள்ளையைத் தடுப்போம். நெசவாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கை புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என அவர் தெரிவித்தார்.