கடலூர் நகராட்சிப் பகுதியில் அதிமுகவின் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர் கந்தன். இவர் 36ஆவது வார்டு கவுன்சிலராக இருந்துவந்தார். கட்சிப் பணியில் 30 ஆண்டுகளாக இருந்துவரும் கந்தன் பலமுறை கவுன்சிலராக இருந்துள்ளார்.
மேலும், இவர் கடலூர் நகர துணைச் செயலாளராகவும் நகர அம்மா பேரவைச் செயலாளராகவும் பதவி வகித்துவருகிறார். தற்போது கடலூர் மாவட்ட நிலவள வங்கியின் இயக்குநராக உள்ளார்.
முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் நெருங்கிய ஆதரவாளரான இவர், ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியிலும் அமைச்சருக்கு அருகில் உடன் இருக்கும் நபராவார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தலில் எம்.சி. சம்பத்தின் தோல்விக்கு கந்தனும் ஒரு முக்கியப் பொறுப்பு, முன்னாள் அமைச்சரை ஏமாற்றிவிட்டதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில், கடலூர் அடுத்த அழகர்கோவிலில் உள்ள அய்யனாரப்பன் முன் கந்தன் இரு தினங்களுக்கு முன், "நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் எதிராகச் செயல்படவில்லை.
வேண்டுமென்று சிலர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர். முன்னாள் அமைச்சருக்கு துரோகம் செய்தவர்களை அய்யனாரப்பன் மன்னிக்க மாட்டார், அவர்களைப் பழி வாங்குவார்" எனப் பேசி காணொலி ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இது தற்போது வைரலாக வந்த வண்ணம் உள்ளது.
இதுபற்றி கந்தனிடம் தொலைபேசியில் கேட்டதற்கு, "நான் அமைச்சரின் தீவிர விசுவாசி. எந்த ஒரு தவறும் செய்யவில்லை. 30 ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கிறேன். அதிமுக வெற்றிபெற அனைத்து வகையிலும் பாடுபட்டேன். முன்னாள் அமைச்சர் தோல்விக்கு நான் பொறுப்பல்ல" எனத் தெரிவித்தார்.
தன் மீது அவதூறு பரப்பும் வகையில் சில அதிமுகவினர் பொய் பரப்புரை செய்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பும் முழு விவரமும்!