கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ள எல்.என்.புரம் பகுதியில் வசித்துவரும் சுரேஷ் (47) என்பவர் அங்கு தையல்கடை நடத்தி வருகிறார். இவரிடம் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
சுரேஷ் தனது மகளின் திருமணத்தினையொட்டி ஜவுளி வாங்குவதற்காக காஞ்சிபுரம் சென்றுள்ளார். மாலையில் தனது கடை ஊழியர் ஒருவரிடம், தன் வீட்டிற்கு சென்று மின்விளக்கு போடுமாறு கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லை என்பதையறிந்த மர்ம நபர்கள் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 35 சவரன் தங்கநகை, 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மாலையில் கடை ஊழியர் சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
இதுகுறித்து அவர் சுரேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பண்ருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பபட்டு தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே காஞ்சிபுரம் சென்றிருந்த சுரேஷ் மற்றும் அவர் குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் உட்பட 35 பவுன் நகை திருடப்பட்டது குறித்து காவல்நியைத்தில் புகார் அளித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை பணத்தின் மொத்த மதிப்பு பத்து லட்சம் என்று சுரேஷ் தரப்பில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மணப்பாறையில் வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் 10 சவரன் நகை கொள்ளை!