உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் போர்க்கால அடிப்படையில் ஜூலை 31 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு மீண்டும் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்துதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவை பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூரில் நேற்றுவரை கரோனா தொற்றால் 1,521 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜூலை13) பெண் கிராம நிர்வாக அலுவலர் உட்பட மேலும் 26 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,547 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 1,129 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேசமயம் இப்பெருந்தோற்றால் இன்று மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் கடலூரில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.