சென்னை கோயம்பேட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் கடலூருக்கு வந்த ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் கடலூருக்கு வந்த 427 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு, சுகாதாரத் துறையினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, கடலூர், பண்ருட்டி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை மையம் மற்றும் சோதனைச் சாவடியினை அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் ஆட்சியர் அன்புச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடலூர் மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்த 700 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மாணவர் விடுதி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 பஞ்சாயத்துகளிலும் அலுவலர்களைக் கொண்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், தாமாக முன்வந்து அந்தந்த பகுதி நிர்வாக அலுவலர்களிடம் தகவல் அளிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இணையத்தில் உலாவும் ஆரோக்ய சேது போலி செயலிகள்!