உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதைத் தவிர்க்கவும் அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தையும் பூட்ட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல், மாவட்ட எல்லைகள் பூட்டப்பட்டு, வாகன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அறிகுறி ஏதேனும் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் குவிந்துள்ளதால் நோய்த் தொற்றும் அபாயச் சூழல் உருவாகியுள்ளது.
ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில் தற்போது அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் ஒருவருக்கு அருகே மற்றொருவர் நிற்பதால் நோய்ப் பரவும் சூழல் அதிகமாக உள்ளது.
எனவே இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:110-விதியின் கீழ் விவசாயிகளுக்காக முதலமைச்சர் அறிவிப்புகள்