தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசுக் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு ரூ.68 ஆக இருந்த தேர்வு கட்டணம் 100 ரூபாயாகவும், முதுகலை பாடப்பிரிவுகளுக்கு ரூ.113 ஆக இருந்த தேர்வு கட்டணம் 160 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்தும், இதனை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கடலூர் தேவனாம்பட்டினதிலுள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக வாயில் முன்பு இன்று மாணவர்கள் நடத்திய போரட்டத்திற்கு அதரவு தெரிவித்தும், தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும், இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.