திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் பிரபுவின் மனைவி தனது குடும்ப பிரச்னை சம்பந்தமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகார் மனு குறித்து காவலர்கள் நேரில் வந்து விசாரணை செய்ய ஆட்டோ அழைத்துவரச் சொன்னதாக பிரபுவிடம் அவர் மனைவி கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் காவல் நிலைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆய்வாளர் வனஜாவிடம் பேச முற்பட்டபோது அவர் பேச மறுத்துள்ளார். மேலும், உனது கணவர் உதவி ஆய்வாளர் என்றால் கொம்பு முளைத்துள்ளதா?. நேரில் வந்து விசாரணை செய்ய வேண்டுமென்றால் ஆட்டோ அழைத்து வா என்று ஒருமையில் கூறியுள்ளார்.
இந்நிலையில் காவல் நிலையத்திற்கு நேரில் வந்த உதவி ஆய்வாளர் பிரபு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனஜாவிடம் புகார் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் காவல்துறையைச் சேர்ந்த சக உதவி ஆய்வாளரை தரைக்குறைவாக பேசி அவர் மீதே வழக்கு போடுவேன் என்று மிரட்டும் தொணியில் பேசியதோடு அவரை அடிக்க பெண் ஆய்வாளர் முற்பட்டுள்ளார்.
இந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெண்களின் பிரச்னைகள் குறித்து தீர்வு காண அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகினால், அங்கு பணிபுரியும் பெண் காவல் அலுவலரே சக காவல் அலுவலரை தரக்குறைவாக பேசிய இச்சம்பவம் கடலூர் மாவட்ட பொதுமக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.