கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலயம் உலக புகழ்பெற்ற ஆலயம். இவ் ஆலயத்தை தீட்சிதர்கள் நிர்வகித்து, பூஜை செய்து வருகின்றனர். தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் எனப்படும் குழந்தைகள் திருமணம் நடப்பதாக தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்தது. இதுதொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உரிய விசாரணை நடத்தி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
இதில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிக்கு தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும். அவ்வாறு செய்தது தவறு எனவும், சமீபத்தில் தமிழக ஆளுநர் கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மருத்துவ குழுவினர் ஏற்கெனவே விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சிதம்பரத்தில் விசாரணை நடத்தியது. இந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் மே 24-ஆம் தேதி சிதம்பரம் வந்திருந்தார். மூன்று கட்ட விசாரணைகளுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை ஆனால் குழந்தைகளில் பிறப்புறுப்பில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது எனத் தெரிவித்து இருந்தார்.
பின்னர் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர். இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை, ஆளுநர் கூறியது முற்றிலும் உண்மை என அவர் தெரிவித்து இருந்தார். அவரின் மாறுபட்ட கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
இந்த நிலையில் குழந்தை திருமணம் செய்யவில்லை என தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் குழந்தை திருமணம் நடைபெற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குழந்தை திருமணம் நடைபெற்ற புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியானதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமணம் நடைபெற்றது குறித்து நேற்று புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கடந்த சில தினங்களாக சிறார் குழந்தைக்கு தடை செய்யப்பட்ட பரிசோதனை நடைபெற்றதா என்று தேசிய ஆணையத்தினுடைய உறுப்பினர் விசாரணை செய்தார்.
மேலும் அது சம்பந்தமான செய்திகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தீட்சிதர்களின் சிறார் குழந்தைகளுடைய புகைப்படங்களை ஊடகத்துறை வெளியிட்டுள்ளது சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயலாகும். வழக்கு நிலுவையில் உள்ள போது கடந்த ஆண்டு அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் பதியப்பட்ட வழக்குக்கு தற்போது எதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
சிறார் குழந்தையினுடைய வழக்கை தமிழக காவல்துறை விசாரணை செய்யக்கூடாது, மத்திய புலனாய்வு விசாரணை செய்ய வேண்டும் என்பதை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து வலியுறுத்துகிறோம். அந்தக் கோரிக்கை வலுப்பெறும் வகையில் தான் தற்பொழுது சிறார் குழந்தையினுடைய புகைப்படங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. அவர்கள் இந்த வழக்கை விசாரிப்பதற்கு எந்தவித தார்மீக பொறுப்பும் இல்லை என்பதை நிரூபிக்கிறது.
சிறார் பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய முகாந்திரம் உள்ளது. எனவே இந்த பிரச்சனையில் சிறார்களுக்கு தடை செய்யப்பட்ட பரிசோதனை நடைபெற்றதா? இல்லையா? என்பதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அதுவரை இந்த வழக்குகளில் உள்ள ஆவணங்கள், சிறார்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது அதேபோல இருவிரல் பரிசோதனை நடைபெற்றதா? இல்லையா? என்பது குறித்து பொதுவெளியில் சர்ச்சை ஏற்படுத்தக் கூடாது, செய்தி வெளியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தால் தான் பாதிக்கப்பட்ட தரப்பிற்க்கு நியாயம் கிடைக்கும்.
எனவே நீதிமன்ற விசாரணையில் தான் உண்மை வெளிப்படும். அதுவரை வரை எந்த தரப்பும் முக்கியமாக தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை, சிறார்களின் புகைப்படங்கள் வெளியிடுவது சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயலாகும், அதனை தவிர்க்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும், “கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்ட வழக்கிற்கு அப்போது வெளியிடப்படாத புகைப்படங்கள் தற்பொழுது தேசிய ஆணையம் இருவிரல் பரிசோதனை தொடர்பாக விசாரணை செய்த பிறகு ஏன் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. தேசிய ஆணையத்தின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது உள்நோக்கத்துடன் தான் தங்கள் மீது உள்ள தவறை மூடி மறைப்பதற்காக தான் காவல்துறை மூலம் தமிழக அரசு சிறார் சம்பந்தமான புகைப்படங்களை வெளியிடுகிறது. இது சட்டத்திற்கு அப்பாற்பட்டது” என்றார்.
இதையும் படிங்க: சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்!