இந்து கோயில்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலும் இந்து அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், பல்வேறு காவல் நிலையங்களிலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள்' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் பல்வேறு தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறி காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் ஆபாசமாகத் திட்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காயத்ரி ரகுராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்எல்சி பாய்லரில் தவறி விழுந்து ஒப்பந்தத் தொழிலாளர் உயிரிழப்பு!