கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். இவர் என்எல்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது மனைவி உமாமகேஸ்வரியுடன் விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குத் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது கார் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே வந்தபோது உட்புறம் புகை வந்துள்ளது. இதைக் கண்ட மாணிக்கம் காரை உடனடியாக நிறுத்திவிட்டுத் தனது மனைவியுடன் கீழே இறங்கி பார்த்தபோது காரின் முன் பகுதியில் தீ பற்றி எரிவதைக் கண்டு இருவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பின்னர் அந்தத் தீயானது கார் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து கார் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து கணவன், மனைவி இருவரும் திகைத்து நின்றனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அளித்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். எனினும் இந்தத் தீவிபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.