கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூரில் பிரசித்திப்பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இங்கு இந்தக் கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் வெண்கலத்தாலான செல்லியம்மன் சிலையை பூமிக்கு அடியில் மண்ணில் புதைத்து வைத்துவிடுவார்கள் திருவிழாவின்போது மட்டுமே எடுத்து பூஜை செய்வது ஐதீகமாகும்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சிலை புதைப்பு
2004ஆம் ஆண்டு மண்ணில் புதைக்கப்பட்ட செல்லியம்மன் சிலையினை எடுக்க ஆண்டுதோறும் கோயிலில் குறி கேட்கும் பிரார்த்தனை நடைபெறும். இந்த ஆண்டும் குறி கேட்கும் பிரார்த்தனையை கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டதில் திருவிழா நடத்த செல்லியம்மன் உத்தரவு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் கழித்து கடந்த 10ஆம் தேதி கொடியேற்றி விழா தொடங்கப்பட்டது. இதனையடுத்து, அத்திவரதரைப் போன்று 15 ஆண்டுகள் கழித்து மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிலையைத் தோண்டி வெளியில் எடுத்து தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
வீட்டிற்கு ஒருவர் வேடமிட்டு ஆடுதல்
எட்டாம் நாள் திருவிழாவன்று வீட்டிற்கு ஒருவர் வேடம் அணிய வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. அதில் தங்கள் வேண்டுதல் நிறைவேற கடவுள் வேடம், திரைப்பட நடிகர் நடிகைகள் வேடம், காளி வேடம், காவலர் வேடம், பாதுகாப்புப் படையினர் வேடம் என பல்வேறு வேடங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒருவர் வேடமிட்டுக்கொண்டு கிராமம் முழுவதும் சுற்றிவருவர்.
இதன் காரணமாக காலை முதலே ஆடல், பாடல், தப்பாட்டம், கரகாட்டம் என இந்தக் கிராமம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த மாதிரியான விசித்திர வழிபாடு மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.