நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. மேலும், அதிமுக-பாஜக- பாமக -தேமுதிக ஆகிய கட்சிகளின் பிரமாண்ட கூட்டணி நாடாளுமன்றம், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் களம் காண்கிறது. இதனால் தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பு குறித்து கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், விருத்தாசலம் அருகே உள்ள பாலக்கரையில் பாமக வேட்பாளர் மருத்துவர் கோவிந்தசாமியை ஆதரித்து பரப்பரை மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, நதிநீர் இணைப்பு, விலைவாசி கட்டுப்பாடு, முத்ரா திட்டம், சாலை வசதி, மின்சாரம் மற்றும் பொலிவுறு நகரதிட்டம் (ஸ்மார்ட் சிட்டி) உள்ளிட்டவைகளை மக்களின் தேவை அறிந்து தாங்கள் நிறைவேற்றி தருவோம் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, கடலூர் நாடாளுமன்றத்திற்குட்பட்ட ஆறு சட்டப்பேரவைத்தொகுதியில் காணப்படும் மக்களின் பிரச்னைகளை விரைவில் தீர்க்கப்படும் எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதி.க,தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.