கடலூர்: கடலூர் மாநகர மக்களின் கனவு அரங்கமாக 'நியூ சினிமா தியேட்டர்' திகழ்ந்து வருகிறது. 85 ஆண்டுகளைக் கடந்தும் சினிமா ரசிகர்களுக்கு அது விருந்து படைத்துக்கொண்டு இருக்கிறது. 1938-ம் ஆண்டு கடலூர் நகரின் மையப் பகுதியில், கெடிலம் ஆற்றின் கரையில் ஸ்ரீதரன் டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு திரையரங்கம் கட்டப்பட்டது.
கடலூரில் அப்போதைய நகராட்சி தலைவராக இருந்த தங்கராஜ் முதலியார்தான் அதன் உரிமையாளர். தென்னாற்காடு மாவட்டத்திற்கு மட்டும் அல்லாது, புதுச்சேரி மாநிலத்திற்கும் அது முதல் திரையரங்கமாகத் திகழ்ந்தது. தொடக்க காலத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், பி.யு சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம் போன்ற பழம்பெரும் நடிகர்கள் நடித்த படங்கள் திரையிடப்பட்டு வந்தன. அதில் பெரும்பாலான படங்கள் வெள்ளி விழாவும் கண்டன.
1953-ம் ஆண்டு கே.பி சுந்தராம்பாள் நடித்த அவ்வையார் படம் அங்கு வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நாடகங்களில் நடித்த போதும் சரி, திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதும் சரி, அடிக்கடி தங்கராஜ் முதலியார் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: ‘அஜித் ரசிகரா இருந்தாலும் ரஜினிதான் எனக்கு’.. போஸ்டரில் முத்தமிட்ட ரசிகர்!
1961-ம் ஆண்டு சிவாஜி கணேசன், சாவித்திரி நடிப்பில் வெளிவந்த பாசமலர் திரைப்படம் தொடர்ந்து 25 வாரம் ஓடியது. காலப்போக்கில் ஸ்ரீதரன் டாக்கீஸ் என்ற பெயர் 'நியூ சினிமா' என மாற்றப்பட்டு, தியேட்டர் புதுப்பிக்கப்பட்டது. பிறமொழிப் படங்களை வெளியிடத் தயங்கிய காலத்தில், நியூ சினிமாவில் பல்வேறு பிறமொழிப் படங்கள் குறிப்பாக அமிதாப்பச்சன் நடித்த படங்கள் திரையிடப்பட்டன.
எம்.ஜி.ஆரின் முதல் படமான சதிலீலாவதியும், கடைசிப் படமாக 1978ஆம் ஆண்டு வெளியான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனும் இங்குதான் திரையிடப்பட்டன. தியேட்டர் உரிமையாளர் தங்கராஜ் முதலியார் 3 முறை கடலூர் நகராட்சி தலைவராக இருந்தவர். பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு தியேட்டர் நிர்வாகத்தை அவருடைய மகன் முத்தையா நிர்வகித்து வந்தார். தற்போது முத்தையாவின் மகள் பத்மபிரியா நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.
1938-ம் ஆண்டில் இருந்து 2000 வரை பல வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்த நியூ சினிமா தியேட்டர், அதன் பிறகு சரிவைத் சந்தித்தது. தியேட்டரை மூடிவிடலாம் என்ற முடிவுக்கு நிர்வாகம் வந்தது. 2002-ம் ஆண்டு ஏ.வி.எம். தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்துடன் தியேட்டரை மூட நினைத்தார்கள். ஆனால் அந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்று, வசூலை அள்ளிக் கொடுத்தது. அதனால் தியேட்டரை மூடும் முடிவை கைவிட்டனர். சென்னை ஸ்டூடியோவில் ஜெமினி படத்தின் வெற்றி விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற, நியூ சினிமா முத்தையாவின் மருமகன் பிரபுவுக்கு, நடிகர் கமல்ஹாசன் நினைவுப் பரிசு வழங்கினார்.
அடுத்தடுத்து தியேட்டரில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாலும், படங்களின் வினியோக உரிமையை வாங்குவதில் தனித்துவமாக செயல்பட்டதாலும் நியூ சினிமா திரையரங்கம் மீண்டும் வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது. கடலூர் மக்களின் மனதைக் கவர்ந்த திரையரங்கமாக நியூ சினிமா இன்றும் திகழ்கிறது.
இப்படிப்பட்டி பெருமையும் பழமையும் வாய்ந்த திரையரங்கத்தின் உரிமையாளர் பிரபு, தற்போது பொதுமக்கள் எளிமையாக திரையரங்கில் டிக்கெட் எடுக்க புதுமையான முயற்சியை மேற்கொண்டார். தானியங்கி இயந்திரம் மூலம் திரையரங்கு செல்ல டிக்கெட்டை விநியோகம் முறையை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் டிக்கெட் எடுக்கும் நபர் தானியங்கியில் டிக்கெட் எடுத்து திரைப்படத்தை பார்க்க வேண்டிய நாள் நேரம் மற்றும் சீட் ஆகியவற்றை தானே தேர்வு செய்து ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தி டிக்கெட்டை எடுக்கும் ஒரு புதிய முயற்சியை கொண்டு வந்து உள்ளார். இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
இதையும் படிங்க: Jailer release: வெளியானது ஜெயிலர் திரைப்படம்: திருவிழாக் கோலம் பூண்ட திரையரங்குகள்.!