கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் சரகத்திற்குள்பட்ட வெள்ளகேட் என்னும் பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில், அப்பகுதி மக்கள் பணம் எடுப்பதற்காக உள்ளே சென்றபோது, இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், விரைந்துவந்த பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வுசெய்தனர்.
அதில், ஏடிஎம் மையத்திற்குள் இரண்டு பேர் வருவது, பின்னர் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு இயந்திரத்தை உடைத்தது, ஆனால் லாக்கரை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்றது என அனைத்தும் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கொள்ளை முயற்சி என வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கொள்ளையர்களை சிசிடிவி காட்சியின் உதவியுடன் தேடிவருகின்றனர்.