கடலூர்: கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று (மே 8) கடலூர் மாவட்ட சிறப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மருத்துவ கண்காணிப்பாளர், இணை கண்காணிப்பாளர், மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் முன்னதாக கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு சமைக்கும் இடத்தையும், ஆக்ஸிஜன் சேமிப்பு மையத்தையும் சிறப்பு அலுவலரும், கடலூர் மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, "கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் 3,567 படுக்கைகள் உள்ள கரோனா மையத்தில் 2666 படுக்கைகள் காலியாக உள்ளது. கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கொண்ட 168 படுக்கைகள் உள்ள நிலையில், இதில் தற்போது நான்கு முதல் ஐந்து மட்டுமே காலியாக உள்ளது. இதனால் போர்க்கால அடிப்படையில் இன்னும் சில தினங்களுக்குள் 166 படுக்கைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
நோயை ஒழிக்க வேண்டுமென்றால் பொதுமக்கள் வீட்டிலே இருக்கவேண்டும் என்றும், நாம் ஒற்றுமையுடன் முயற்சித்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும் என்றும் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் ஏழு தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஐந்து தனியார் மருத்துவமனைகள் கூடுதல் சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயிற்சி மருத்துவர்கள் 2-வது நாளாக போராட்டம்!