கடலூர்: விருத்தாசலம் அருகே உள்ள வலசை கிராமத்தைச்சேர்ந்தவர், காசிப்பிள்ளை. விவசாயியாக உள்ளார். இவர் தனது மனைவி சாந்தகுமாரி உடன் அங்கு வசித்து வருகிறார். இவரது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 25) 11 மணி அளவில் சாந்தகுமாரி தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது முயல்வேட்டைக்கு வந்த நபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் முயலை நோக்கி சுட்டபோது, தவறுதலாக சாந்தகுமாரி மீது பால்ரஸ் குண்டு பாய்ந்து இடதுபுற இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுட்ட நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், காசிப்பிள்ளை சாந்தகுமாரியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தார். பின்னர், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குண்டு அகற்றப்பட்டது.
இதையடுத்து, மங்கலம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தலை முடியில் வைத்து தங்கம் கடத்தல் - சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல்