கடலூர் மாவட்டம் விருத்தாசலம்- இருப்பு கிராமத்திலுள்ள முந்தரிக்காட்டில், கடந்தாண்டு ஜுலை 13ஆம் தேதி உடல் முழுவதும் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் உடல் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் உத்தரவின்பேரில் நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் லோகநாதன் மேற்பார்வையில் காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பல நாள்களாக இதில், எந்த துப்பும் துலங்காத நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.
கடலூர்- மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்த சங்கரபாணி என்பவரின் மகன் ஸ்ரீதரன்(39), சுதா என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் முடித்துள்ளார். அவர்களுக்கு மோகன்(13), பரணி(9) என்ற இரு மகன்கள் உள்ளனர். ஸ்ரீதரன் பெரம்பலூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேருந்துகளுக்கு பொறுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
![கடலூர் செய்திகள் cuddalore crime news cuddalore women killed her husband cuddalore women illegal affairs husband killed கடலூர் கள்ளக்காதல் கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7191403_pic.jpg)
இதற்காக அவர் கல்லூரியிலேயே தங்கி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அவ்வாறு வீட்டிற்கு வரும்போது ராமாபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை வீட்டிற்கு அழைத்து வர, சிவராஜுக்கும், சுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவருக்குண்டான பழக்கம் திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஸ்ரீதரனிடம் கூறியும் அவர் நம்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஒருநாள் சிவராஜும், சுதாவும் நெருக்கமாக இருப்பதை ஸ்ரீதரன் பார்த்துவிட அவரை அவ்விருவரும் சேர்ந்து அடித்து கொலை செய்துவிட்டு சுதாவின் தங்கையின் காரில் ஸ்ரீதரின் உடலை எடுத்துச் சென்று முந்திரிதோப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
யாரும் சந்தேகப்படாமல் இருப்பதற்காக கடந்த ஜுலை 22ஆம் தேதி திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதரனை காணவில்லை என சுதா புகாரளித்துள்ளார். புகார் தெரிவித்து 9 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் தாங்கள் செய்த கொலையை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்து இருந்த சுதா, தற்போது காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மாட்டிக்கொண்டார்.
இதையும் படிங்க: சினிமா பட பாணியில் கத்திக்குத்து - திகிலூட்டும் சிசிடிவி வீடியோ