கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவ 13 வயது சிறுவன், அண்ணாமலை நகரில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுபோல் சில தினங்களுக்கு முன்பும் வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 23ஆம் தேதி சிறுவன் சிதம்பரநாதன்பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனின் உடலைக் கைப்பற்றினர். பின்னர், இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு மருத்துவர்கள் செய்த பிரேத பரிசோதனையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை அண்ணாமலை நகர் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் ராகுல் (19) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் சிறுவனின் கழுத்தை நெரித்து, தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததை ராகுல் ஒப்புக் கொண்டார்.
மேலும் விசாரிக்கையில், தனது பாட்டி வீட்டிற்கு சிறுவன் அடிக்கடி வருவார். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்பவரிடம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிதம்பரநாதன்பேட்டை கோயில் திருவிழாவிற்காக சிறுவன் தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். ஜூலை 20ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்ற சிறுவன் கோயிலிலே படுத்திருந்துள்ளார்.
அப்போது, ராகுல் சிறுவனை இயற்கை உபாதைக்காக துணையாக வா எனக்கூறி அழைத்துச் சென்று, அவனது கழுத்தை நெரித்து பின்னர் தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இந்த நிலையில் சிறுவன் ராகுலின் அக்காவை பற்றி வேறு ஒரு நபரிடம் தவறாக பேசியதாகவும், அதனால் கோபமடைந்து சிறுவனை கொலை செய்ததாகவும் ராகுல் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ராகுலை கொலை வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நான்கு நாட்களுக்கு பிறகு சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார் என்று எண்ணிய நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் கிராம மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:30 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய பாதையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலம்!