கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த செல்வம். இவர் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பல்வேறு வழிப்பறி வழக்குகள், மேட்டுப்பாளையம், மீனம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்குகள், மகாபலிபுரம் காவல் நிலையத்தில் இரண்டு வழிப்பறி வழக்குகள், வேலூர் மாவட்டம் காவல் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்குகள், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் என மொத்தம் 12 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இன்று (பிப்.10) செல்வம் நெல்லிக்குப்பம் அருகே மதுபோதையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்து, பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற காவல் துறையினர் செல்வத்தைக் கைது செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்வின் பரிந்துரையின் பேரில் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், விருதாச்சலம் பகுதியில் தமிழழகன் என்பவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவருவதை கவனித்த, காவல் உதவி ஆய்வாளர் புஷ்பராஜ், அவரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது தமிழழகன் அவரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விருதாச்சல காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தமிழழகனை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே அழகு பெருமாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பேட்டை உதவி ஆய்வாளர் தீபன் மற்றும் காவல் துறையினர், பாண்டியனை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
அப்போது பிடிக்க சென்ற காவல் துறையினரையே பாண்டியன் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பாண்டியன் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் லாட்டரி வியாபாரி, சாராய வியாபாரி, ரவுடி உள்ளிட்ட மூன்று பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்வின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா மூரி ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டதன் பெயரில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புடைய செம்மரக் கட்டைகள் பறிமுதல்!