கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், அக்கரைக் கோரி, சொத்திக்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், ஆயிரக்கணக்கான ஃபைபர் படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக 2018ஆம் ஆண்டு மே 15ஆம் தேதியன்று தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
சோனாங்குப்பம் மீனவர்கள் சுருக்கு வலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை அறிந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடல் ஓரமாக திரண்டு கத்தி, அரிவாள், சுளுக்கி போன்ற பயங்கர ஆயதங்களுடன் சோனாங்குப்பம் சென்று ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
சோனாங்குப்பம் மீனவ கிராமத்திற்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில் சமாதானத்தில் ஈடுபட முயன்ற சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன்வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர்.
![கொலை குற்றவாளிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18372123_h.jpg)
இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு நடக்கும் போதே ஒருவர் இறந்துவிட்டார். இதையடுத்து 20 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்து கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. அதன் பிறகும், இவ்வழக்கில் சில முக்கிய சாட்சியங்கள், அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.
![கொலை குற்றவாளிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18372123_im.jpg)
குற்றம் சாட்டப்பட்ட 20 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் இன்று (ஏப்.28) தீர்ப்பினை அறிவித்தார். அதன்படி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 20 பேரில் 10 பேர் குற்றவாளி என அவர் தீர்ப்பளித்தார்.
ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசை மணி, சரண்ராஜ், சுதாகர், எதிர்வேல், குமரன் என்கின்ற தென்னரசு, ஸ்டாலின் மற்றும் முத்துக்குமார் ஆகிய 10 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி பிரகாஷ் இவர்களுக்கான தண்டனை விவரத்தை இன்று மாலை அறிவிப்பதாக தெரிவித்தார். மாலை தீர்ப்பை வாசித்த நீதிபதி பிரகாஷ், காலையில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.
மேலும் மற்ற 10 பேரை விடுவித்த அவர் தண்டனை பெற்றவர்களுக்கு அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதன் காரணமாக கடலூர் நீதிமன்ற வளாகத்தில் தண்டனை பெற்றவர்களின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால், பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் தண்டனை பெற்றவர்களைப் பார்க்க வேண்டும் என காவல் துறையினரிடம் முறையீட்டில் ஈடுபட்டனர்.
அவர்களைப் பார்க்க காவல் துறையினர் அனுமதிக்காத நிலையில் நீதிமன்ற வளாகத்தின் கதவின் முன்பு நின்று அவர்கள் கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் கதவை சாத்திய காவல் துறையினர், பின்னர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும்போது பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் நீதிமன்ற வளாகத்தின் வெளியே காத்திருந்தனர். பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர், இந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பிற்காக வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்த தீர்ப்பு வருவதை ஒட்டி கடலூர் சோனாங்குப்பம் மீனவர் கிராமம் மற்றும் தேவனாம்பட்டினம், மீன்பிடி துறைமுகம், கடலூர் நீதிமன்ற வளாகம் என பல்வேறு இடங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள்!