கடலூர் மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீபாவளி வசூல் நடைபெற்று வருவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது. அதனை தொடர்ந்து,லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 12 மணிளவில் தொடங்கப்பட்ட இந்த சோதனையில் துணை ஆய்வுக்குழு அலுவலர் அமுதா, லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜா, உட்பட 8 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஓட்டுனர் உரிமம், பதிவு சான்றிதழ், உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக காத்திருந்த பொதுமக்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை அலுவலகத்துக்குள் வைத்து கதவை பூட்டிக்கொண்டு, மோட்டார் வாகன ஆய்வாளர்களின் அறை, அலுவலக ஊழியர்களின் மேஜை, டிராயர்கள், பீரோக்கள், ஆவணங்கள் அனைத்தையும் சோதனையிட்டனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்களை அலுவலகத்திலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைபற்றினர். மேலும் இது தொடர்பாக இடைத்தரகர்கள், அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தீபாவளி சீட்டில் ரூ. 2 கோடி மோசடி செய்த நபர் தலைமறைவு!