கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் உள்ள பில்சின்னாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சரஸ்வதி. இவரது கணவர் மாற்றுத்திறனாளியான பழனிசாமி. இவர்களுக்கு காளிமுத்து என்ற மகன் உள்ளார்.
காளிமுத்து பில்சின்னாம்பாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மேலும், படைக்க சோமந்துறை மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தார். பின் மேல்படிப்புக்காக பொள்ளாச்சி பாலக்காடு சாலையிலுள்ள என்.ஜி.எம் கல்லூரியில் 2014ஆம் ஆண்டு BSC கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்றார்.
படிப்பை முடித்தவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக தட்டச்சு பணியாளராக நான்கு வருடங்களாக பணியில் இருந்துள்ளார். அரசுப்பணியில் சேர டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளார். மேலும், அவருக்கு கவிதை எழுதும் பழக்கம் உள்ளதால், பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நடத்தும் கவிதைப்போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். அவர் எழுதிய கவிதைகள் குறித்து பலதரப்பட்ட இதழ்களில் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இலக்கிய வட்டத்திலுள்ள நண்பர்கள் மூலம் கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டு, பலதரப்பட்ட மக்களை ஈர்த்துள்ளார். இதையடுத்து மத்திய அரசு கவிதைகள் எழுதும் இளம்கவிஞர்களுக்கு வழங்கும் 2022 சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது கவிஞர் காளிமுத்துவுக்கு கிடைத்துள்ளது.
மத்திய அரசு விருது வாங்க இருக்கும் காளிமுத்துவை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பாராட்டுகள் தெரிவித்து உதவித்தொகை வழங்கினார்.தங்களது கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கு மத்திய அரசு விருது வழங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டு வேலைகளில் தவறு செய்யும்போதெல்லாம் மேடம் என்னை அடிப்பாங்க... பாதிக்கப்பட்ட பெண் பேட்டி...