புற்றுநோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பிப்.4ஆம் தேதி புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்டம் ப்ரூக் பீல்டு சாலையில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்க அலுவலகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தலை முடி தானம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் இந்திய மருத்துவர்கள் சங்க பெண் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவிகள் உட்பட பலரும் தங்களது 25 செ.மீ முடியை அளித்தனர். அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து தானம் அளித்த ஹரிணி (தன்னார்வலர்) என்பவர் கூறுகையில், 'கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து முடியை தானம் அளித்தேன். இந்தமுறை மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து முடியை தானம் செய்தேன்' என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ சங்கம் கோவை மாவட்ட பெண்கள் கிளையின் தலைவர் நளினி, 'புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்பு முடி உதிர்தலால் பலரும் மனம் உடைந்துபோகின்றனர். அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக இம்முயற்சி மேற்கொண்டுள்ளோம். வரும் 28ஆம் தேதிவரை இந்த முடி வழங்கும் தானம் கோவை டாடாபாத் பகுதியிலுள்ள Glenys Skin and Hair Care Clinic மற்றும் ஜி எஸ் மில்ஸ் பகுதியில் உள்ள tony நிலையத்திற்கும் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர் அங்குச் சென்று முடி தானம் செய்யலாம்' எனத் தெரிவித்தார்.