கோயம்புத்தூர்: கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திரா கார்டனின் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சரண்யா - கோபிநாத் தம்பதியினர். இவர்கள் குடியிருக்கும் வளாகத்தில் உள்ள அண்டை வீட்டில் வசித்து வருபவர்கள் கோவை மாநகராட்சி மேயரின் தாயார் காளியம்மாள் மற்றும் அவரது தம்பி குமார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் குமார், கோபிநாத்திடம் 15,000 ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதில் 5,000 ரூபாயை மட்டுமே திருப்பி தந்ததாகவும், மேயர் கல்பனா ஆனந்த்குமார் மேயாராக பொறுப்பேற்றதில் இருந்து மீதி தொகையை தரவில்லை என சரண்யாக புகார் கூறுகிறார்.
இந்நிலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அரசு குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக குமார் வீட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தான் வசித்து வரும் வீட்டை காலி செய்ய வைக்க மேயரின் தம்பி குமார் பல்வேறு விதங்களில் டார்ச்சர் செய்வதாக சரண்யா குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: திருமணம் மீறிய உறவு விவகாரம்; தகராறை தடுக்கச் சென்றவர் கத்திக்குத்தில் பலி!
தங்கள் வீட்டின் பின்னால் அழுகிய பழங்கள், கோழி இறைச்சிகள், உள்ளிட்டவற்றை குமார் வீசி செல்வதாக சரண்யா தனது புகாரில் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி அருவருக்கத்தக்கவகையில் சிறுநீரை டப்பாவில் பிடித்து வந்து தங்கள் வீட்டின் சமையறை பகுதியில் ஊற்றி செல்வதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், பூசணிக்காய், எலுமிச்சை இவற்றை கொண்டு மாந்திரிகம் போன்றும், பில்லி சூனியம் போன்றெல்லாம் செய்து வைத்து தொந்தரவு அளிப்பதாக சரண்யா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாதவாறு அவர்களது வாகனங்களை நிறுத்தி விடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இவற்றையெல்லாம் கேமரா மூலம் பதிவு செய்துள்ள நிலையில் அவற்றை சரண்யா வெளியிட்டுள்ளார். இதனிடையே வீடியோ பதிவு செய்ததை அறிந்த குமார் மற்றும் சில ஆட்கள் தங்களை மிரட்டுவதாகவும் சரண்யா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் சரண்யா மனு அளித்துள்ளார். மேயர் குடியிருந்த ஆர்.எஸ்.புரம் அரசு குடியிருப்பில் அமானுஷ்ய சக்திகள் உலா வருவதாக கூறி மேயர் கல்பனா தனது தாயாருடன் வசித்து வருவதாக சரண்யா தனது புகாரில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் போலீஸ் தற்கொலை முயற்சி.. வரதட்சணை கொடுமை என பெண் போலீஸ் புகார்..