கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(30). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில், நேற்று காலை அனுராதா வேலைக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கோல்டுவின்ஸ் பகுதி வழியாகச் செல்லும்போது, அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. இதை எதிர்பார்க்காத அனுராதா, உடனடியாக பிரேக் போட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தார்.
அப்போது அவ்வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறிவிட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக அனுராதாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்குக் கால்களில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
அப்பகுதியில் அதிமுக பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை, இல்லத் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அதிமுக கொடிக் கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. அந்த கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்குக் காரணமெனவும், அதனைக் காவல் துறையினர் மறைப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணக்கில் காட்டப்படாத ஜேப்பியாரின் 350 கோடி ரூபாய் சொத்து: வருமான வரிச் சோதனையில் அம்பலம்!