கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் பேராசிரியர் மகேஸ்வரன். இவரது மனைவி சிந்து மோனிகா. திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் ஒன்றரை வயதில் வெண்பா என்ற பெண் குழந்தை உள்ளது. தாய்ப்பால் தானம் குறித்து சிந்து மோனிகா சமூக வலைதளப் பக்கங்களில் பார்த்து உள்ளார். தானும் அதே போல தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார். பின்னர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த தாய்ப்பால் சேமிப்புக்காக செயல்பட்டு வரும் அமிர்தம் தாய்ப்பால் தானம் என்ற அமைப்பை சிந்து மோனிகா நாடியுள்ளார்.
அந்த அமைப்பை சேர்ந்த ரூபா என்பவர் தாய்ப்பால் சேமிப்பு குறித்தும் அதை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பது குறித்தும் சிந்து மோனிகாவுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அதன்படி கடந்த பத்து மாதங்களாக 55 லிட்டர் தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிந்து மோனிகா வழங்கியுள்ளார். இவரின் முயற்சி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் இவருடைய சாதனை ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய சிந்து மோனிகா, "தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்று. தாய்ப்பால் பல குழந்தைகளுக்கு கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். இது குறித்து சமூக வலைதளங்களில் தெரிந்து கொண்ட பின்பு தாய்ப்பாலை தானமாக வழங்குவதற்கு முடிவெடுத்தேன். அதன்படி தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
குழந்தை பெற்ற ஒவ்வொரு தாய்மார்களுக்கும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் அதனை தானமாக வழங்க முன்வர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் இல்லாமல் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அதனை தடுக்க ஒவ்வொருவரும் தாய்ப்பால் தானம் செய்ய முன்வர வேண்டும். தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும் என்பது தவறு. அழகை காட்டிலும் குழந்தையின் நலன் முக்கியம்" என தெரிவித்தார்.
இது குறித்து சிந்து மோனிகாவின் கணவர் மகேஸ்வரன் கூறுகையில், "பெண்கள் இதுபோன்ற தாய்ப்பால் தானத்திற்கு முன் வருவதில்லை. அதனை ஒவ்வொரு தாய்மார்களும் கொடுப்பதற்கு முன் வரவேண்டும். தாய்ப்பால் தானம் கொடுப்பதற்கு என் மனைவி முயற்சி எடுத்ததை போன்று அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு ஆண்களின் பங்கு முக்கியம். தாய்ப்பால் தானம் வழங்குவதை ஊக்கப்படுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
அமிர்தம் தாய்ப்பால் தானம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபா கூறுகையில், "தாய்ப்பால் தானம் அமைப்பை நடத்தி வருகிறோம். பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை வாங்கி தாய்ப்பால் வங்கியில் ஒப்படைக்கிறோம். எடை குறைவாகவும் சத்து குறைவாகவும் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானமாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் 1,143 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தற்போது வரை 1,500 லிட்டர் தாய்ப்பால் தானமாக தங்களது அமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தலைமுறை காட்டிலும் இந்த தலைமுறையில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. நம்முடைய குழந்தைக்குப் போக மீதமுள்ள பால் மற்ற குழந்தைக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்கள் உள்ளனர்.
இன்னும் சிலரிடம் தேவையற்ற கருத்துக்கள் உள்ளன. தாய்ப்பால் தானமாக வழங்க வீட்டில் உள்ளவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தாய்ப்பால் என்பது எடுக்க எடுக்க சுரக்கும். தங்களுடைய குழந்தை குடித்தது போக மீதமுள்ள பாலை எடுத்து சேமித்து தானமாக வழங்கினால் மற்ற குழந்தைகளை காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 200 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படுகிறது. இவ்வளவு ஊட்டச்சத்துள்ள இந்த தாய்ப்பாலை தினமும் வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தங்களுடைய அமைப்பில் 5,000 பேர் உள்ளனர். இதில் 200 பேர் மாதம் மாதம் தாய்ப்பாலை தானமாக வழங்கி வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: EWS 10% இட ஒதுக்கீடு செல்லும்: முதலமைச்சரின் அடுத்த கட்ட மூவ் என்ன? - திமுக மூத்த வழக்கறிஞர்